ஹிட்லர்களும் பிரச்சனைகளும் 

புதிய இந்தியா  என்று சொல்லப்படும் 
அதே பழைய இந்தியாவின் 
வாலில்  புதிய பிரச்னை பிறந்த போது ,
பழைய பிரச்சனைகள் பரணில் ஒதுங்கின...
.
கேடுகெட்ட அரசு என எதிர்க்கட்சிகள் முழங்கின ..
பிரச்சனைகளின் மூலகர்த்தா  நீங்கள்தான் என ஆளும்கட்சி அமைச்சர் 
திருப்பியடித்தார் தன்  முடியில்லா  தலையை தடவியபடி ..
கொஞ்சூண்டு மானமுள்ள இன்னொரு அமைச்சர் மத்திக்கு 
கத்தியை காட்டினார்.... வந்து பார் .... 
மத்தியில் இருந்து ஒரு சுத்தி வந்தது  தாக்கீதுடன் 
"ஆப்பு விரைவில் அடிக்கப்படும் " என்று 
வந்த வேகத்தை கண்டு.. 
ஐம்புலன்களையும் அடக்கி அமரானார் தற்காலிகமாக 
அந்த மானஸ்தன் மந்திரி .
இவங்களுக்கு வேறு வேலையில்லை என
கறை  படிந்த  கையை கன்னத்தில் 
வைத்து  உறங்க போனது அரசு 

நெட்டிசன்கள் குட்ட துவங்கினார்கள் 
நாயே,பேயே  என துவங்கிய வசவுகள் 
சமூக வலைத்தளத்தில் சாக்கடையாக  ஓடின ..
கவலையே படவில்லை அவர்கள் .. மாறாக 
எல்லாம் சரி என்றது  இயல் , இசை ..
அதற்கும் கேட்க முடியாத ராகத்தில் பதில் இசை 
பல்லிளித்தன . 

எதிர்கட்சிகள் மனித சங்கிலியாயின ..
மதி கேட்ட அரசே .   மானம் கெட்டவர்களே .. 
தெருவில்  ஒலித்த குரல்களுக்கு பதிலாய் தடியடி 
மெதுவாய் எழுந்த தீப்பொறி
 படர துவங்கியது வன நெருப்பாய் 
மனிதனின் புத்திரர்கள் கவிதை எழுதினார்கள் ...
மிருகங்களின் ஜந்துக்கள் அதை பரிகசித்தன ..

நாங்கள் உதவுகிறோம் என நான்கு  நல்லவர்கள் வந்தனர்,
ஏதோ குத்தியது போல்  எழுந்த அரசாங்கம் ,
அள்ளி  அல்ல ... கிள்ளி கொடுத்தது பிரச்சனையை தீர்க்க 
பயனில்லை எதுவும்...
மனமுடைந்தோர் தீக்குளிக்க , 
அதிர்ச்சியில்  அமரர் ஆனார்கள் சிலர் ..

பிரச்சனை பிரவாகமாய் ஆனது ..
மத்திக்கு  சொன்னார்கள் அவர்கள்.. 
ஓட்டு போட்ட மக்களுக்கே எதுவும் செய்யவில்லை 
ஒட்டு போடாத இவர்களுக்கு என்ன 
எகத்தாளமாக சொன்னார்  பெருசு ...
எப்போதோ , யாரோ முகத்தில் பூசிய கரியை  துடைத்தபடி ..

எல்லாம் கடந்து போகும்  .. என  சொன்னார் 
ஊரை கொளுத்தும் ராசாவிற்கு  தீப்பெட்டி 
எடுத்து கொடுக்கும் மந்திரி ..

அப்போதுதான் அது நிகழ்ந்தது 
இனிமேல் அது கிடையாதாம்... எகிறி குதித்து 
பிறந்தது புதிய பிரச்சனை  
பழைய பிரச்சனைகள் பரணில் ஒதுங்கின...

_ அறந்தை அபுதாகிர்   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....

காட்டுவாசி