Posted Date : 14:11 (10/10/2015) Last updated : 17:22 (10/10/2015) 'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!

திப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு,

நீங்கள் எப்போதாவது வந்து போகும் இந்தியாவில், கருப்பு பண பங்கு தொகை 15 லட்சம் வாங்கி, புல்லெட் ரயிலில் பயணிக்க காத்திருக்கும் ஒரு இந்தியனின் கடிதம் இது...

உங்கள் விமானம் எப்போதாவது இந்தியாவைக் கடந்து சென்றால், எட்டிப் பாருங்கள்... ஜன்னல் வழியே! எங்கும் பச்சை பசேல் என தெரிய வேண்டியவை கொஞ்சம் பச்சை, கொஞ்சம் கருப்பாக, வெளிர் மஞ்சளாக தெரியும். பருவ மழை பொய்த்த பின் பாழாய்ப் போன நிலங்கள் அவை

அந்த நிலங்களின் விவசாயிகளோ வானம் பார்த்து வறண்டவர்கள். மானியங்களைத் தொலைத்த மனிதர்கள். முடிவாக மானம் காக்க ஒரு முழ கயிற்றில் தொங்கி உயிர் விட துணிந்தவர்கள். 

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயியின் அடுத்த தலைமுறையினர், வேகமாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். கடும் இன்னல்களுக்கு இடையே தவிக்கும் விவசாயிகளின்  கொஞ்ச நஞ்ச நிலங்களையும் உருவ முயற்சித்த தங்களின் நில சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு பின்வாங்கி உள்ளது. ஆனால் இது உண்மையில் கைவிடப்பட்டதா ... அல்லது, மாநில தேர்தலுக்கான பதுங்கலா?  தங்களுக்கே மட்டுமே தெரிந்த ரகசியம். 

எனினும் விவசாயிகளின் கல்லறை மீது தொழிற்சாலைகள் கட்ட துணிய மாட்டீர்கள் என நம்புகிறோம். அடுத்த முறை வெளிநாடு செல்லும்போது அங்குள்ள விவசாயிகளைச் சந்தியுங்கள். (மறக்காமல் செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள்)

நாட்டின் பொருளாதாரம் தள்ளாடி, இந்தியா ரூபாயின் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. தங்களின் 56 இன்ச் மார்பு, இந்தியா பொருளாதரத்தை ஒரு இன்ச் கூட நகர்த்தவில்லை. ஒருமுறை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னார்... " உங்களின் பொருளாதார அறிவை ஒரு ஸ்டாம்ப் பேப்பரின் பின்னால் எழுதி விடலாம் " என்று. அதை நீங்கள் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் நிரூபித்தீர்கள் தொழிலதிபர்கள் அனைவரும் பொருளாதார மந்த நிலையை பற்றி  கவலை எழுப்பியபோது , எப்படியாவது ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யுங்கள் என்றீர்கள். ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருப்பவருக்கு வேண்டியது தொலைநோக்கு பார்வை. ஆனால், தாங்கள் முயற்சிப்பதோ கேமராவுக்கான பார்வை.

நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் என உங்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்க, நீங்களோ நிறைவேற்றத் துடிப்பது உங்களை உயர்த்திய அதானி, அம்பானிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை .... 

தொழில் வளர்ச்சி மட்டும் நாட்டுக்கு  வளர்ச்சியைக் கொடுக்காது என்பதை தற்போது தடுமாறும் சீன பொருளாதாரம் தங்களுக்கு உணர்த்தவில்லையா ? 

இந்திய வாக்காளர்களில் மூன்றில் இருவர் உங்களைத் தேர்ந்தேடுக்காவிட்டாலும் , 31 சதவீத வாக்குகள் வாங்கி, இந்திய பிரதமராக ஆனாலும், 100  சதவீத இந்தியர்களுக்கு நீங்கள்தான் பிரதமர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதி. அதனால்தான் உங்களுக்கு வெளிநாடுகளில் வீரிய வரவேற்பு . நரேந்திர மோடி எனும் தனி மனிதருக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் உங்களது அடிப்பொடிகளின் போக்கு அடிப்படையே மாற்ற முயல்கிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிப்பதில் இருந்து , சமூக நீதியையும், சமயச் சார்பின்மையும் அடித்து துவம்சம் செய்கிறார்கள் . ஆனால் எந்த ரியாக்ஷனும் இல்லை உங்களிடமிருந்து ...

எது நடக்கும் என அச்சப்பட்டார்களோ, அது நடந்து கொண்டு இருக்கிறது.. எந்த சலனமுமில்லை எங்கள் பிரதமரிடம் இருந்து ..

ஓய்வில்லாமல் உலகை சுற்றிவரும் நீங்கள் உலகம் மாறுவதை கவனிக்க தவறியது ஏனோ? உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம் மதசார்பின்மையை பிரகடனப் படுத்தியுள்ளது. மத நம்பிக்கை அற்ற ரஷியாவில் கிறி ஸ்துவ ஆலயங்களை அதிபர் புதின் முன்நின்று திறக்கிறார். முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு நாடு இந்து கோயில் கட்ட அனுமதி அளிக்கிறது. இவர்களுக்கெல்லாம் மதம் ஒரு பொருட்டல்ல. வேறுபாடுகளைக் கடந்த அன்பும், அமைதியும் ஒரு தேசத்தை ஒருங்கினைக்கின்றன என்பதை அறிந்தவர்கள்.

ஆனால் மதசார்பின்மையையும், உலக அமைதியையும் வலியுறுத்திய இந்தியா எங்கு சென்றுகொண்டு இருக்கிறது?. கடிவாளம் உங்கள் கையில்தான் பிரதமர் அவர்களே ..

உ.பி யில் மாட்டு இறைச்சி உண்டதற்காக பி.ஜே.பி யினர் நடத்திய படுகொலை தேசத்துக்கு  தலைகுனிவைத் தந்திருக்கிறது. யார் என்ன உண்ண வேண்டும் என்பதை உலகின் மிகப்பெரிய சர்வதிகாரி ஹிட்லர் கூட தீர்மானிக்கவில்லை. 

ஆனால் தாங்கள் உங்களது கட்சியினர் செய்யும் மகா தவறுகளைக் கண்டிப்பதும் இல்லை. தண்டிப்பதும் இல்லை. தாங்கள் கொஞ்சி குலாவும் சமூக வலைதளங்களின்மூலம் கண்டனங்கள் தங்களை சென்று அடைந்திருக்கும். தங்கள் நண்பர் ஒபாமா சமூக வலைதளத்தில் உ.பி சம்பவத்தை கண்டிக்கிறார். ஆனால் உலகநாடுகளை சுற்றிவரும் நீங்கள் இன்னமும் இந்த உள்ளுர் விவகாரத்தில் கருத்து சொல்லவில்லை.

ஒருமுறை அரசின் அறநெறி தவறியதால் இன்னும் உங்களை துரத்துகிறது ஒரு கரு நிழல். பிறகு ஏன் இன்னும் இந்த மௌனம் ?

மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்பார்கள். உங்களின் இந்த மவுனத்திற்கும்  என் போன்ற அப்பாவி இந்தியர்கள் அதையே கற்பித்துக்கொள்ளலாமா?

இதற்கும் மவுனம் காத்துவிடாதீர்கள் பிரதமரே...

- அறந்தை அபுதாகிர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....

காட்டுவாசி